நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த, பாப்பான் சத்திரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த 60 வயதான மாரிமுத்து, 54 வயதான மனைவி ரேவதி ஆகிய இருவரும், அருகில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

husband wife found

இந்நிலையில், இரவு முழுவதும் மாரிமுத்துவும், ரேவதியும் வீட்டிற்கு வரவில்லை. காலையிலும் அவர்கள் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த அவரது இரு மகன்கள், தோட்டத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்குள்ள மரத்தில் மாரிமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது மனைவி ரேவதி, தலையில் காயங்களுடன் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு நிலையில் இறந்து கிடந்துள்ளார். இவற்றைக் கண்டதும், அவர்களது மகன்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

husband wife found

அப்போது, மனைவியின் நடத்தையில் மாரிமுத்துவுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படும் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தன்று கணவன் - மனைவி இடையே வழக்கம் போல் சண்டை ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, ரேவதியைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு, தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்றும், பின்னர் அந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மாரிமுத்து தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

இதனிடையே, நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியைக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.