சென்னையில் உள்ள முன்னணி திரையரங்குகளில் ஒன்றாக விளங்கும் ஆல்பர்ட் திரையரங்குக்கு இன்று (மார்ச் 31) சீல் வைக்கப்பட்டது. சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தப்படாத காரணத்தால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எழும்பூரில் உள்ள பிரபலமான ஆல்பர்ட் திரையரங்குக்கு சீல் வைத்து ஜப்தி அறிவிப்பு செய்யப்பட்டது.

முன்னதாக கடந்த 2021-2022 நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி நாள் முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் வரியைக் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்தது. இதனையடுத்து ஆல்பர்ட் திரையரங்கு பல வருடமாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருப்பதாக சென்னை மாநகராட்சியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தால் சீல் வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 51 லட்சத்து 22 ஆயிரத்து 752 ரூபாய் சொத்து வரியும் 14 லட்சம் ரூபாய் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்த காரணத்தால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆல்பர்ட் திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து ஒட்டுமொத்த நிலுவையிலுள்ள வரி தொகையை திரையரங்கு தரப்பிலிருந்து காசோலையாக வழங்கிய நிலையில், ஆல்பர்ட் தியேட்டரில் வைக்கப்பட்ட சீல் நீக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது ஆல்பர்ட் திரையரங்கம் வழக்கமான செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.