இந்திய திரைப்பட தணிக்கை துறை தொடர்பாக தற்போது மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறது. இதன்படி ஏற்கனவே இருக்கும் விதிகளில் மாற்றங்கள் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு வருகிற ஜூலை 2-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இருந்த ஒளிப்பதிவு சட்டம் 1952 திருத்தி மத்திய அரசிற்கு பல அதிகாரங்களை கொடுக்கும் வகையில் இந்த புதிய சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால்  தணிக்கை செய்து(Central Board of Film Certification (CBFC))  பெறப்பட்ட சென்சார் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்ய முடியும்.
 
மேலும் இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட சான்றிதழ்களில் விதிமீறல்கள் இருந்தால் அதனை மத்திய அரசு திருத்துவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதமாக இருக்கிறது. அதாவது சென்சார் வாரியம் எடுக்கும் முடிவை மாற்றி அமைக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு தேவை என்பதை உணர்த்தும் விதமாக இச்சட்டம் அமைந்துள்ளது. இருந்தாலும் இதுவரை ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களை மத்திய  அரசு திருத்துவதற்கான அதிகாரம் இல்லை.
 
மத்திய அரசின் தலையீட்டிற்கு வழிவகுக்கும் இந்த புதிய சட்டத்தில்  பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில் சென்சார் வாரியத்தின் தலைவரை அந்த சான்றிதழை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அறிவிப்பாக வயது வாரியாக ஏற்கனவே இருக்கும் வீதிகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. முன்னதாக எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி அனைத்து மக்களும் பார்க்கும் படங்களுக்கு யு (U) சான்றிதழும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க கூடிய திரைப்படங்களுக்கு யு/ஏ (U/A) சான்றிதழும் 18 வயதிற்கு மேல் வயது வந்தவர்கள் அனைவரும் பார்ப்பதற்கான படங்களுக்கு ஏ (A) சான்றிதழும் வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது அமலுக்கு வரும் இந்த புதிய சட்டத்தில் யு(U) மற்றும் ஏ(A) சான்றிதழ்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் யு/ஏ (U/A) சான்றிதழ்களில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன. அதன்படி ஏழு வயதிற்கு மேற்பட்ட மக்கள் பார்க்கக்கூடிய திரைப் படத்திற்கு யு/ஏ 7+ (U/A 7+) என்றும் 13 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு யு/ஏ 13+  (U/A 13+) என்றும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு யு/ஏ 16+ (U/A 16+) என்றும் புதிய விதிகள் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு திரை உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.