குறும்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் துவங்கி, திரையுலகில் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் பாபி சிம்ஹா. 2012-ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கடைசியாக டிஸ்கோ ராஜா எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். 

தற்போது தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கூட நல்ல கதைகளில் நடித்து வருகிறார். புத்தம் புதுக் காலை ஆந்தாலஜியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மிராக்கிள் குறும்படத்தில் நடித்திருந்தார் பாபி சிம்ஹா. தற்போது, ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி சிம்ஹா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கவுள்ளார். இவர் பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.

அவள் அப்படித்தான், பன்னீர் புஷ்பங்கள், கடலோரக் கவிதைகள், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், அமரன், உள்ளிட்ட பல படங்களை கே.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

தற்போது மகன் விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்வர் எழுதியுள்ளார். முழுக்க கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் பாபி சிம்ஹாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர்.