எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படாமல் இருந்துவருகிறது. 

அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் ஹேஷ்டெக் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அதனைக் கடந்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், மொயின் அலி, தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் சென்னை வந்தபோது அவர்களிடம் என எல்லாரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்கத் தொடங்கினார்.

இந்நிலையில் பாஜக-வின் கோவை தெற்கு வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளார் ரசிகர் ஒருவர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை தீர்மானித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இருபெரும் கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரச்சாரத்தில் பிஸியாகி விட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாஜக தொண்டர் ஒருவர் வலிமை அப்டேட் எப்ப என ட்விட்டரில் வானதியிடம் கேட்டிருந்தார்.

அதற்கு, நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என பதிலளித்தார் வானதி சீனிவாசன். இந்த ட்வீட் உடனடியாக வைரலானது.