திரை உலகின் மூத்த முன்னணி நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார், தளபதி விஜய் நடித்த "சந்திரலேகா" திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகை வனிதா,  சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நடிகர் நகுல் நடித்த நான் ராஜாவாக போகிறேன் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த வனிதா தொடர்ந்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "பிக் பாஸ்-3" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனையடுத்து விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையலில் அசத்தி அந்த நிகழ்ச்சியின் பட்டத்தை வென்றார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான வனிதா விவாகரத்திற்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் குறுகிய காலகட்டத்திலேயே பீட்டர் பாலின் மோசமான நடவடிக்கைகளால் அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் மீண்டும் தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் நடிகை வனிதா விஜயகுமார் யாருடனும் தொடர்பில் இருப்பது போல சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை வனிதா பதிலளித்துள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, "நான் அனைவருக்கும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். நான் தனிமையில் தான் இருக்கிறேன். வதந்திகளை பரப்பாதீர்கள் , நம்பாதீர்கள்" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிகை வனிதாவை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது நடிகை வனிதா கொடுத்துள்ள இந்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.