பிரபல தமிழ் நடிகையும் விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். யாஷிகா ஆனந்த் அதிவேகமாக ஓட்டிய கார் சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிசெட்டி பாவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த மற்ற நண்பர்களும் மோசமான காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பல்வேறு எலும்பு முறிவு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று உயிர் சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யாஷிகா ஆனந்த் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக யாஷிகாவின் இடுப்பு எலும்பு பகுதி மற்றும் வலது கால் பகுதியில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் குணமடைய சில மாதங்கள் வரை ஆகும் என முன்னதாக நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில், உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு, காயத்திலிருந்து மீண்டு வரும் நடிகை யாஷிகாவின் புதிய மருத்துவமனை புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.  யாஷிகா , அவரது தாயார் மற்றும் அவரது செல்லப்பிராணி என மூவரும் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.யாஷிகா விரைவில் குணமடைந்து வர தொடர்ந்து யாஷிகாவின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.