விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 106 நாட்களாக நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த சீசனில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

இதனையடுத்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பிக் பாஸ் தமிழ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். முன்னதாக வாரநாட்களில் இரவு ஒரு மணி நேரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒன்றரை மணி நேரமும் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாக ரசிகர்கள் காணமுடியும். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை அறிவிக்கும் விதமாக நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) பிக் பாஸ் அல்டிமேட் ப்ரோமோ வெளியானது.

இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் ஐந்து சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மீண்டும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். எனவே முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கணம் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்கும் உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனில் எத்தனை போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்  தனது ட்விட்டர் பக்கத்தில், “சொல்லும் சொல்லித் தொலையும்... மொத்தம் 16 பேராம் உங்க Listஆ கீழே Comment பண்ணுங்க” என பதிவிட்டுள்ளது. எனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் யார் யாரென்ற தகவல்களோ அறிவிப்புகளோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.