பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் போட்டியாளர்களுள் ஒருவரான சம்யுக்தாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மாடலிங் துறையைத் தாண்டி ராதிகா சரத்குமார் உடன் சந்திரகுமாரி சீரியலில் கார்த்திக் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்த சம்யுக்தா, விரைவில் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

இத்திரைப்படத்தை அடுத்து இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சம்யுக்தா முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா, தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ன் ஸ்டார் போட்டியாளரான ரம்யா பாண்டியனுடன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரெட்ரோ ஸ்டைலில் ஆடை அணிந்து சம்யுக்தாவுடன் சேர்ந்து நடனத்தில் பட்டையை கிளப்புகிறார் ரம்யா. 

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. 

இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் அடுத்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு தங்களை உயர்த்திக்கொண்ட ரம்யா பாண்டியன் மற்றும் சம்யுக்தாவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.