ஆரம்ப காலகட்டத்தில் பல தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகளுக்கு தோன்றிய நடிகர் விஜய்சேதுபதி படிப்படியாக வளர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்து என்றும் மக்கள் செல்வன்-ஆக உயர்ந்து நிற்கிறார்.

கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தும் நடிகர் விஜய்சேதுபதி தெலுங்கில் நடித்த  உப்பென்னா திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக 19 (1) (a) என்ற புதிய மலையாளத் திரைப்படத்திலும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மக்களின் மனம் கவரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகழாத ஆட்களே இல்லை . சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் விஜய் சேதுபதியின் எளிமையை குறித்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதி குறித்து பதிவிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு தொடரின் மூலம் அறிமுகமான நடிகை சிவானி நாராயணன் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்த ஷிவானி நாராயணன்  அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு   "Man Of Simplicity" என புகழ்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள துக்குலக் தர்பார், கடைசி விவசாயி, லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.