தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக விளங்கும் சினேகன், சேரனின் பாண்டவர் பூமி படத்தின் “தோழா தோழா” , அமீரின் ராம் படத்தின் “ஆராரிராரோ” , பருத்திவீரன் படத்தில் “அறியாத வயசு” , “அய்யய்யோ” , சியான் விக்ரமின் சாமி படத்தின் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” , வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் “யாத்தே யாத்தே” & “அய்யய்யோ நெஞ்சு” என பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படத்தில் இவர் எழுதிய “காட்டுப் பயலே” பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி மெகா ஹிட்டானது. ஒரு சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வலம் வரும் சினேகன் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியில்  போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் சமீப காலமாக பாடலாசிரியர் சினேகனுக்கு திருமணம் என  பரவிய பேச்சுவார்த்தைகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளரும் சீரியல் நடிகையுமான நடிகை கன்னிகா ரவியை பாடலாசிரியர் சினேகன் திருமணம் செய்து கொள்ள உள்ளார். பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவியின் திருமணம் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் வருகிற ஜூலை 29ஆம் தேதி நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை கன்னிகா ரவி இயக்குனர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த அடுத்த சாட்டை திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.