இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அனபெல் சுப்ரமணியம். தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, ஜாங்கிரி மதுமிதா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதியும், டாப்ஸியும் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரே கட்டமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.

இதன் ஷூட்டிங், ஜெய்ப்பூரில் நடந்தது. இதன் படப்பிடிப்பில் ஜாங்கிரி மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பை படக்குழு பாராட்டி வருகிறது. வேகமாக சமைக்கும் காட்சி ஒன்று இந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்டதாம். அதில் நடிகை மதுமிதா பங்குகொண்டு வேகமாக சமைக்க வேண்டும். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் உடலில் பட்டு, அவர் இடுப்பு பகுதியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. 

வலியால் துடித்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் அந்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளாராம் மதுமிதா. படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த விஷயம் படக்குழுவுக்குத் தெரிய வந்திருக்கிறது. காயம்பட்ட இடம் வடுவாக மாறியுள்ளது மதுமிதாவுக்கு. பிறகு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.. காயத்தை உடனே சொல்லாமல் மறைத்ததற்காக இயக்குனர் மற்றும் யூனிட்டை சேர்ந்தவர்கள் மதுமிதாவை அன்புடன் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே போல விரதம் மேற்கொள்வதைக் கடைப்பிடித்து வரும் மதுமிதா, ஒரு நாள் படப்பிடிப்பின்போது நாள் முழுவதும் சாப்பிடாமல் மயங்கி விழுந்துள்ளார். பதறிய படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். இருந்தும் தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்து முடித்தாராம். ஒருபுறம் பாராட்டுகள் குவித்தாலும், இனி எச்சரிக்கையாக இருங்க மதுமிதா என்று அக்கறையும் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை மதுமிதா. இந்த படத்திற்குப் பிறகுதான் அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்றே பெயர் வந்தது. அதற்கு பிறகு திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என நடித்து வந்த அவருக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.