தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து மிகப் பிரபலமடைந்தார்.

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் (சீசன்-2) கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து நோட்டா, கழுகு 2, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் அடுத்ததாக இயக்குனர் S.J.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் கடமையைச்செய் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே  ஈசிஆர் சாலையில் நண்பர்களோடு பயணித்த யாஷிகா ஆனந்தின் கார் நள்ளிரவில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் பயணம் செய்த அவருடைய நெருங்கிய தோழியான பவனி (வயது 28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பவனியின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாமல்லபுரம் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களோடு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் யாஷிகா ஆனந்த் மீண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இளம் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.