தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு சின்னத்திரை & வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அந்தவகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன், “வேலன்” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக, 2-ம் இடம் பிடித்த சாண்டி மாஸ்டர் “3:33” படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து லாஸ்லியாவும்  “பிரண்ட்ஷிப்” மற்றும் “கூகுள் குட்டப்பா” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தர்ஷனின் “கூகுள் குட்டப்பா” விரைவில் வெளிவரவுள்ள நிலையில், கவின் நடித்த “லிப்ட்” திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார்-ல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் “விக்ரம்” திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் 2-ம் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரேசகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.