2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். 

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 
படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர் குறித்த விவரம் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருக்கும் சோம் சேகர் எனும் சோம்ஸ் தான் அது. இந்திய விமானத்துறை அதிகாரியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பின் போது, ஏர் ஃபோர்ஸ் உடையில் எடுத்த புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் அப்போது பகிர்ந்துள்ளார். 

சோம் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரரும் ஆவார். அவர் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்திருப்பது சோமுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்று தான் கூற வேண்டும்.