அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். கடந்த அக்டோபர் மாதம் இத்திரைப்படத்திலிருந்து அதிதிராவ் விலகியதால் அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதி ராப் பாடகர் அறிவு பாடிய அண்ணாத்த சேதி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்று அவர் முதல்நாளாக படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் சம்யுக்தாவை திரையில் காண ஆவலுடன் இருப்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

இந்த பிக்பாஸ் சீசனில் முதல் குறும்படம் சம்யுக்தாவுக்காகத் தான் ஒளிபரப்பப்பட்டது என்றாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மாடலிங் துறையைத் தாண்டி ராதிகா சரத்குமார் உடன் சந்திரகுமாரி சீரியலில் கார்த்திக் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்த சம்யுக்தா, விரைவில் விஜய் சேதுபதியுடன் வெள்ளித்திரையில் தோன்ற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையில் கால் பதித்திருக்கும் சம்யுக்தாவிற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். பிக்பாஸில் இவரது எவிக்ஷன் போது பலரும் வருந்தினர். வெளியே வந்தவுடன் தன் மகனுடன் கேக் வெட்டும் வீடியோவை வெளியிட்டிருந்தார் சம்யுக்தா.