இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான படம் பூமி. ஜெயம் ரவியின் 25-வது படமாக அமைந்தது இந்த படம். திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிட்ட இந்தப் படம், கொரோனா அச்சுறுத்தலால் ஜனவரி 14-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்தவர்களும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த விமர்சனங்கள் தொடர்பாகப் படக்குழு அமைதி காத்து வந்தது.

இந்நிலையில், பூமி படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை நான் பார்த்த படங்களில் பூமி போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. சுறா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை வரிசையில் முதலிலிருந்து முடிவு வரை எதுவுமே சரியாக இல்லை. இயக்குனர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி என்று தெரிவித்தார்.

இதில் ஜெயம் ரவி, இயக்குனர் லக்‌ஷ்மண் ஆகிய இருவருடைய ட்விட்டர் கணக்கையும் அந்த ரசிகர் குறிப்பிட்டு இருந்தார். உடனடியாக அவரைப் பின்தொடர்பவர், தற்போது இயக்குநர் லக்‌ஷ்மண் உங்களை ப்ளாக் செய்வார் என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சார் நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா ? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் சகோ. நீங்க சிறப்பு, ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன் என்று இயக்குனர் லக்‌ஷ்மண் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அதை ரசிகர்கள் தாராளமாக விமர்சிக்கலாம். அதே நேரத்தில் ஒரு படத்தையோ, படத்தை இயக்கிய இயக்குனரையோ தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம் ?  ஒரு திரைப்படத்தை உருவாக்க பல தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமாத் துறை சார்ந்த மனிதர்களின் உழைப்பு உள்ளது என்பதையும் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

bhoomi director lakshman replies to a fan about bhoomi negative reviews