சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமையான நேற்று சென்னையில் நடந்தது. வெகு நாட்கள் கழித்து சிலம்பரசனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர். 

இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு.

இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள்.

படப்பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேர்த்தியான திறமைக்காரர் திரு.
இது குடும்ப பாங்கான படம். இப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள். இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குனர் சுசீந்திரனின் திறமை தான் காரணம். என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ஈஸ்வரன் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

சிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட ஆவலாக உள்ளனர் சிம்பு ரசிகர்கள். ஈஸ்வரன் படத்தின் பாடல் ஜுக் பாக்ஸும் வெளியாகி விருந்தளித்து வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.