நடிகர் விமல் மற்றும் ஓவியா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் A.சர்குணம். தொடர்ந்து இவர் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நடிகர் தனுஷுடன் இணைந்து நையாண்டி நடிகர் அதர்வாவுடன் சண்டிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் மீண்டும் களவாணி படத்தின் தொடர்ச்சியாக களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் நடிகர் அதர்வாவுடன் இணைந்து இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.  நடிகர் அதர்வா மற்றும் நடிகர் ராஜ்கிரன் இணைந்து தாத்தா - பேரனாக முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் R.K.சுரேஷ் ஜெயப்பிரகாஷ் ,சிங்கம்புலி, மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

லைக்கா புரொடக்சன்ஸ் ,சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான உஸ்தாத் ஓட்டல் படத்தின் ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார் . பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதுகிறார்.

திருவையாறு மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி நடைபெறும் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடைக்குட்டி சிங்கம், விசுவாசம் திரைப்படங்களைப் போல அழகான  குடும்பத் திரைப்படமாக இத்திரைப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.