திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. முன்னணி நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது திரைப்பயணத்தில் அயராத உழைப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வளர்ந்துள்ளார். 

கடைசியாக 2019-ல் இவர் நடித்த 100 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார். ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தொடர்ந்தனர் படக்குழுவினர். இதனால் படம் குறித்த அப்டேட் ஏதாவது கிடைக்காதா என்ற ஆவலில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மாதம் டிசம்பர் 8-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கும், வருகிற 11-ம் தேதி டீஸரும் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

அதர்வா நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.