தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்து உள்ளது. மறைந்த நடிகர் முரளி குடும்பமும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்து உள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ், தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோவின் மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள்.

இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கில் இனிதே அரங்கேறியது.

கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது. இந்த நல்ல செய்தி குறித்து அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ இருவரும் இணைந்து கூறியதாவது...

நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் இல்ல திருமண நிகழ்வு அனைவர் ஆசிர்வாதத்தில் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இன்னும் பிரமாண்டமாக காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம்.

தற்போதைய உலக சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் மிக விரைவில் நிலமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரமாண்ட வரவேற்பு விழா செய்தி திட்டமிட்டுள்ளோம். திருமண பந்தத்தில் இணைந்து பயணிக்கும் எங்கள் இல்ல வாரிசுகளை அனைவரும் ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.