பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய திரைப்படம் சல்பேட்டா பரம்பரை. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. மேலும் இப்படத்தில், அட்ட கத்தி தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றிய ஆர்யா, தனது புகைப்படங்களை ரஞ்சித் சார் நான் ரெடி என சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதையடுத்து இப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுத்தப்பட்டதால் படம் தாமதமானது.

இப்போது, சமீபத்திய அறிக்கை என்னவென்றால், வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ஆர்யா தனது பாத்திரத்திற்காக குத்துச்சண்டை திறன்களைப் பயின்று வருகிறார், மேலும் அவர் தனது தொழில் வாழ்க்கையின் மிகவும் சவாலான படம் என்று ஒருமுறை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். போத ஏறி, புத்தி மாறி எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான துஷாரா வடசென்னை பெண்ணாக ஆர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.

சமீபத்தில் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் கலையரசன் மற்றும் ஜான் கொக்கெனின் பயிற்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது 150 கிலோ ஸ்குவாட் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பயிற்சியாளருடன் ஆர்யா பயிற்சி செய்யும் இந்த வீடியோ திரை ரசிகர்களை தாண்டி ஃபிட்னஸ் பிரியர்களையும் ஈர்த்து வருகிறது. 

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாயிஷா நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது.