ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கினர். 

எனிமி படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார். ஆர்யா ஜோடியாக நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகினார். 

கையில் துப்பாக்கியுடன் விஷால் கொண்ட போஸ்டர் மற்றும் சாங்கி சிறையில் இருக்கும் கைதியாக ஆர்யாவின் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்னர் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் விஷால் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை எனிமி படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். 

கடைசியாக துபாய் ஷூட்டிங்கை நிறைவு செய்த படக்குழுவினர், 90 சதவித படப்பிடிப்பு முடிவடைந்தது எனவும், 10 நாட்கள் கொண்ட சென்னை படப்பிடிப்பு மீதம் உள்ளது என்று தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் விரைவில் டீஸர் வெளியாகும் என்ற தகவலையும் கூறியிருந்தனர். 

இந்நிலையில் ஆர்யா எனிமி படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் முழு நேர லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே நிறைவு செய்துள்ளார். மேலும் ஆர்யா நடித்த காட்சிகள் தனக்கு பெரிதளவில் ஈர்த்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார் இயக்குனர். 

சமீபத்தில் ஆர்யா நடித்த அரண்மனை 3 மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படமும் வெளியாகவுள்ளது. பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார்.