தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அரவிந்த் சுவாமி இயக்குனர் மணிரத்னத்தின் தளபதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரோஜா, இந்திரா, மின்சார கனவு, என் சுவாசக் காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இதனையடுத்து சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த அரவிந்த் சுவாமி மீண்டும் இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் தனது 2வது இன்னிங்சை தொடங்கினார். தொடர்ந்து தனிஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி என தொடர்ந்து தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் நரகாசுரன் திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராகியுள்ள ரெண்டகம், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வணங்காமுடி மற்றும் சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கள்ளபார்ட். மூவிங் ஃப்ரேம்ஸ் தயாரித்துள்ள கள்ளபார்ட் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

கள்ளபார்ட் திரைப்படமும் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் தற்போது சென்சாரில் U/A வழங்கப்பட்டுள்ளதாகவும் வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.