ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “அருவி” திரைப்படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அதிதி பாலன். கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே எதார்த்தமான உணர்வுகளை பிரதிபலிக்கும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
 
முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் & அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் தோன்றிய நடிகை அதிதி பாலன்,“அருவி” திரைப்படத்திற்கு தமிழ் திரை உலகில் மிகப் பிரபலம் அடைந்தார். அருவி திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர், விகடன் மற்றும் சர்வதேச விருதுகள் உள்பட பல விருதுகளை தன் சிறந்த நடிப்பால் பெற்றார் நடிகை அதிதி பாலன்.இதையடுத்து வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆன்தாலஜி  படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலையாளத்தில் அதிதி பாலன் நடித்த புதிய திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் தானு பாலக் இயக்கியுள்ள “கோல்ட் கேஸ்” (COLD CASE) திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பாளரான அண்டோ ஜோசப் தயாரிக்கும்  “கோல்ட் கேஸ்” (COLD CASE) திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து அதிதி பாலன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுச்சித்ரா பிள்ளை, அணில் நெடுங்காடு, ஆத்மேயா ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள  “கோல்ட் கேஸ்” (COLD CASE) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.