தமிழ் சினிமாவில்   பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.  வாழ்க்கையிலும் திரை பயணத்திலும் அருண்ராஜா காமராஜின்  மிகப்பெரிய துணையாக இருந்த  அவரது மனைவியின் இறப்பிற்கு பிறகு முதல் முறையாக சமூக வலைதளங்களில்  தன் மனைவி குறித்தும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறித்தும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.அதில் 

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டதை கண்ட நொடி முதல் , நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.

"நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னைவிட்டுப்பிரித்துவிட்டு சென்றது.”. 

“நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே”,

”பல்லாயிரம் பல லட்சம் பறிகொடுத்தும் இந்த எதிரியை நாம் வீழ்த்தவில்லையெனின் இந்தப்போர்  நினைவில் கூட எண்ணிப்பார்க்க எதுவுமின்றி அழிவுகளாகவே எஞ்சி நிற்குமோ என்ற ஓர் அச்சம் நமை கொஞ்சமாவது செயல்பட வைத்தால் நாம் இழப்புகளை தவிர்க்கலாமோ!!

ஓர் நச்சு, அதை நாம் பரிகாசமாக்க நினைத்து பலரை பறிகொடுக்கிறோமோ!!!”

“நம் இனத்தை நாமே வேரறத்தோம் என்ற வரலாற்றை அள்ளிப் பூசிக்கொள்ள , அறியாமலும் துணிந்துவிட வேண்டாம்.நான் தவறவிட்டதை இன்னும் எத்தனயோ லட்சம் பேர்கள் தவறவிட்டதை தயவு கூர்ந்து வேறு யாரும் தவறவிட வேண்டாம்.இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது.”

“என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.”

நன்றிகள்.

“எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. 

மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்” 

என மிக உருக்கமாக பதிவு செய்திருக்கிறார் அருண் ராஜா காமராஜின்   இந்த உருக்கமான பதிவு படிப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.