நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து உருவாகி வரும் திரைப்படம் சினம். அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். அருண் விஜய் போலீசாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்து விட்டார் நடிகர் அருண் விஜய். இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தார் அருண் விஜய். 

அருண் விஜய்யின் பதிவின் கீழ் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், படம் ஓடிடி-ல் வெளியாகுமா ? அல்லது திரையரங்கில் வெளியாகுமா ? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அருண் விஜய், தியேட்டர் என கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் சென்சார் சான்றிதழ் பெற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அருண் விஜய் கைவசம் அக்னிச் சிறகுகள் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் விஜய் ஆண்டனி அக்‌ஷரா ஹாசன், ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள், கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. அக்னிச் சிறகுகள் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் இயக்குனர் நவீன் தெரிவித்திருந்தார். 

இந்த வருடம் அருண் விஜய்க்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். அவரது மகன் ஆர்னவும் திரையுலகில் கால் பதித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கிவருகிறார். இதற்காக ஆர்னவ் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.