அருண் ஜெட்லி காலமானார்
By Arul Valan Arasu | Galatta | August 24, 2019 13:17 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடும் அவதியுற்று வந்தார் அருண் ஜெட்லி. இதனையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அருண் ஜெட்லியின் உடல் கடந்த சில வாரங்களாக மேலும் மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லியை சந்தித்து வந்தனர்.
அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உயர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி இன்று பிற்பகல் 12.07 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
இதனிடையே, அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.