தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் அருள்நிதி தொடர்ந்து ஹாரர் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், ஆக்ஷன் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என பலவிதமான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் D-BLOCK.

தமிழகத்தின் பிரபலமான யூட்யூப் சேனல்களில் ஒன்றான எருமசாணி யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த விஜயகுமார் D-BLOCK படத்தின் மூலம் முதல்முறை வெள்ளித்திரையில் இயக்குனராக களமிறங்குகிறார். சமீபத்தில் வெளிவந்த D-BLOCK படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

முன்னதாக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இதனிடையே அடுத்த க்ரைம் த்ரில்லர் படமாக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் தேஜாவு.

தேஜாவு படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள தேஜாவு படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அருள்நிதியின் தேஜாவு படத்தின் டீசர் தற்போது வெளியானது. சற்று முன் வெளியான இந்த டீசர் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விறுவிறுப்பான தேஜாவு பட டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.