காஞ்சனா படத்திற்கு பிறகு திரை ரசிகர்களிடையே திகில் படங்களுக்கென வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கினார். நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர், திகில் படங்களையும் இயக்கி அசத்தினார். விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அரண்மனை 3 படத்திற்கான பணிகளைத் தொடங்கினார் சுந்தர்.சி. 

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் தொடங்கியது. ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு.

இதற்காக அரண்மனை போன்ற அரங்கை சுமார் 2 கோடி ரூபாயில் உருவாக்கி அதில் படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார். அதனை முடித்துவிட்டு, தற்போது பொள்ளாச்சியில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் அரண்மனை 3 படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். அங்கு முக்கியமான காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. டிசம்பர் 1-ம் தேதியுடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

அரண்மனை 3 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஆர்யா. விஷால் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளார் என்று பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ஆர்யா 30. வட சென்னையில் உள்ள இளைஞன் தனது பாக்ஸிங் கனவுகளை எப்படி நிஜமாக்கிக்கொள்கிறான் என்பதைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது. இப்படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ளார் ஆர்யா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.