தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் அனுஷ்கா. அனுஷ்காவின் ரசிகர் பட்டாளத்திற்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு அவரை ரசிகர்கள் நேசிக்கின்றனர். கடந்த 2005-ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து அசத்தியவருக்கு மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நடித்து அசத்தினார். தெலுங்கில் பிஸியாக இருந்தாலும் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். வானம், தாண்டவம், தெய்வத்திருமகள், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம், லிங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். 

அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது. அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், கடந்த வருடமே இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுனால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் படம் அமேசான் பிரைமில் நாளை அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் பற்றி அனுஷ்கா கூறும்போது, நான் இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து இந்த படத்தின் சாக்‌ஷி கேரக்டர் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் ஆக்டிவாக இருக்கும்போது, அனுஷ்கா, இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்திருந்தார். 

அதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய செய்திகளை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் ட்விட்டரில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் அடிக்கடி கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து இப்போது ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகை அனுஷ்கா. அவர் தனது முதல் ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் வணக்கம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது என் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு. சில சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதைப் பின் தொடருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.