ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். 

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது இப்பாடல். பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். தனுஷ், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தனர். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் வழக்கமாக வரும் சிவப்பு நிற பென்ஸ் கார், இந்த பாடலிலும் வருகிறது. பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது இப்பாடல். 

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தனுஷ் கிடா மீசையில் சுருளி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. 

ஜகமே தந்திரம் படத்தின் புது அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதாவது ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியாகவிருக்கும் புஜ்ஜி பாடல் வரிகளை அனிருத் பாடியுள்ளாராம். இந்த பாடல் வீடியோ நவம்பர் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பல நாட்கள் கழித்து DNA காம்போவை ரசித்திட ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். 

இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் பணிகளும் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும். D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.