தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் மிக முக்கிய இயக்குனர்கள் ஒருவராக திகழும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் ஜெயில். இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் (வெயில் திரைப்படத்திற்கு பிறகு) மீண்டும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிகர் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்னதாக இயக்குனர் வசந்தபாலனின் இயக்கத்தில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் அநீதி. நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடிக்கும் அநீதி திரைப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், M.ரவிக்குமார் படத்தொகுப்பு செய்யும் அநீதி திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான அநீதி திரைப்படத்தின் டைட்டில் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விரைவில் அநீதி திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அநீதி திரைப்படத்தின் முதல் பாடலாக திகட்ட திகட்ட காதலிப்போம் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

GV.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமான வெயில் திரைப்படத்தில் முதல் பாடலை எழுதியவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள். ஆகச்சிறந்த பாடலாசிரியராக தமிழ் திரை உலகிற்கு எண்ணற்ற பாடல்களை வழங்கிய நா.முத்துக்குமார் அவர்கள் தற்போது நம்மோடு இல்லாத போதும் அவருடைய கவிதைகளை தொகுத்து அநீதி திரைப்படத்தின் திகட்ட திகட்ட பாடலின் வரிகளாக பயன்படுத்தியுள்ளார் ஜீவி. அநீதி படத்திலிருந்து நா.முத்துக்குமார் அவர்களின் திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் இதோ…