தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். கடைசியாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.

இதனை அடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகியுள்ள ஹாரர் த்ரில்லர் படமான பிசாசு 2, இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் ஃபாரஸட் த்ரில்லர் படமான கா, நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள வட்டம் மற்றும் பிரபல நடன இயக்குனர் பாபு ஆண்டனி முதல் முறை இயக்கும் புதிய படம் என வரிசையாக அடுத்தடுத்த படங்கள் ஆண்ட்ரியாவின் நடிப்பில் தயாராகி வருகின்றன.

முன்னதாக நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து நடிகை சுனைனா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படமான இத்திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் கடல் கன்னியை மையப்படுத்திய ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதல் முறையாக கடல் கன்னியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.