இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை பொன்மகள் வந்தாள் புகழ் இயக்குனர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

மேலும் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் இதர கதாபாத்திரங்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு, அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கின் தலைப்பை முடிவு செய்து அறிவித்துள்ளது படக்குழு. அந்தகன் என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அந்தகன் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் நாயகி உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது தெரியவரும்.

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இடம் பெற்றிருக்கும் பாத்திரங்களை தேர்வு செய்த விதம் பிரமாதம் என்றே கூறலாம். காமெடி நடிகர் யோகிபாபு ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி பின்னணியில் இதன் கதை நடக்கிறது என்ற தகவலும் தெரிய வந்தது.  ஜனவரியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதென திரை வட்டாரங்கள் கூறி வருகிறது. 

கிறிஸ்துமஸ் நாளில் பிரசாந்த் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார். முருக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார். பாலாஜி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.