ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதுன். அயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்திருந்தனர். சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்றது இந்தப் படம். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் பெற்றுள்ளார். அவரே தயாரிக்கிறார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். 

பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இதையும் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் படத்தில் இருந்து அவர் விலகினார் என்ற செய்திகள் இணையத்தில் கசிந்தது. இப்போது பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இந்த படத்தை இயக்குகிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் இடம் பெற்றிருக்கும் பாத்திரங்களை தேர்வு செய்த விதம் பிரமாதம். நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார் என்றும், யோகிபாபு ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தில் தபு நடித்த கேரக்டர் நெகட்டிவ் சாயல் உள்ளது. அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பலரிடம் பேசி வந்தனர். பின்னர் சிம்ரன் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்கும் நடிகை கிட்டத்தட்ட முடிவாகிவிட்டாராம். புதுச்சேரி பின்னணியில் இதன் கதை நடக்கிறது என்ற தகவலும் தெரிய வந்தது.  ஜனவரியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதென திரை வட்டாரங்கள் கூறி வருகிறது. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் நாளான இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதில் நடிகர் பிரசாந்த் பியானோ வாசிக்கிறார். இந்த படத்திற்காக பியானோ பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. மாரி சக்தி என்ற பியானோ கலைஞர் பிரசாந்திற்கு ட்ரைனிங் தந்துள்ளார். முருக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார். பாலாஜி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.