நீலத்தாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அமலா பால் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார். சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள், நடிகர் சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி, தளபதி விஜயின் தலைவா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
 
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரோடும் கதாநாயகியாக நடித்து நட்சத்திர நடிகையாக திகழ்கிறார்.  வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே 2, ராட்சசன், ஆடை என பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். 

நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் தமிழில் இயக்குனர் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குனர்கள் இணைந்து இயக்கிய பாவக் கதைகள் வெப்சீரிஸ் போலவே தெலுங்கில் வெளியான பிட்டக் கதலு வெப்சீரிஸில் அமலா பால் நடித்த எபிசோட் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
 
இந்நிலையில் அடுத்ததாக லூசியா, யுடர்ன் என சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பவன் குமார் இயக்கும் குடி யடமைத்தே என்னும் புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார். aha Originals எனும் OTT தளத்தில் வெளியாகும் குடி யடமைத்தே வெப்சீரிஸில் காவல்துறை அதிகாரியாக அமலாபால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோ டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.