தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது முதல் திரைப்படமான பீட்சா திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் வித்தியாசமான கதை களங்களை கையாண்டு வரும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர். தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

முன்னதாக கடந்த ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் 17 மொழிகளில் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் & துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மலையாளத்தில் மெகா ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மகான் திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மகான் மிகவும் புத்திசாலித்தனமான திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களை அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு மிகச்சரியாக பயன்படுத்தியதற்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டாவை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விட்டீர்கள் பாபி சிம்ஹா, துருவ் விக்ரமின் தாதா கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அன்பும் மரியாதையும்" என பாராட்டியுள்ளார்.