கடந்த 2021 ல் சந்தன மரக்கடத்தல் அடிப்படையாக கொண்டு அட்டகாசமான ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் தெலுங்கில் இரண்டு பாகங்களாக உருவான புஷ்பா படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் வித்யாசமான தோற்றத்தில் நடிப்பில் மிரட்டி எடுத்திருப்பார். இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ரசிகர்களாலும் புஷ்பா திரைப்படம் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில்,தனுஞ்ஜேய், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மைத்ரி மூவீஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மிரோஸ்லோவ் ஒளிப்பதிவு செய்ய கார்த்திக் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்திருப்பார். மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார்.
முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திலும் அதே குழு, அதே நடிகர்கள் இரண்டாம் பாகம் முழுவதும் அல்லு அர்ஜுன் ஃபஹத் பாசில் இடையேயான் மொதாலாகவும் மக்கள் கொண்டாடும் தலைவனாக புஷ்பா மாறுவது போன்ற கதையை கொண்டுள்ளது. இது தொடர்பாக புஷ்பா தி ரூல் திரைப்படத்திலிருருந்து சமீபத்தில் வெளியான ‘Where is pushpa?’ என்ற முன்னோட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிரெண்டிங் ஆனது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் புஷ்பா தி ரூல் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபஹத் பாசில் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் சுகுமார் படமாக்கி வந்தார். அதை தொடர்ந்து தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பை முடித்து விட்டு புஷ்பா படக்குழுவினர் ஒரு பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது நர்கெட்பல்லே என்ற கிராமத்தின் அருகே எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் புஷ்பா படக்குழுவினரில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். இறுதிகட்ட தகவலின் படி யாருக்கும் எந்த உயிர் ஆபத்தும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்வு தெலுங்கு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை படக்குழுவில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது