பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ஆலியா பட். முன்னதாக இந்த ஆண்டு(2022) இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் நடித்த கங்குபாய் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பிரமாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து ப்ளாக பஸ்டர் ஹிட்டடித்த RRR திரைப்படத்திலும் ஆலியா பட் கதாநாயகியாக நடித்திருந்தார். 

தொடர்ந்து இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பிரம்மாஸ்திரா, இயக்குனர் ஜஸ்மிட் கே ரீன் இயக்கத்தில் டார்லிங் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இயக்கத்தில் ராக்கி ஆவுர் ராணி கி ப்ரேம் கஹானி உள்ளிட்ட திரைப்படங்கள் ஆலியா பட் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே  ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் நடிகை ஆலியா பட். ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை கேல் கெடாட் கதாநாயகியாக நடிக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படத்தில் ஆலியா பட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பைலட் வேவ் மற்றும் ஸ்கை டான்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தை டாம் ஹார்பர் இயக்குகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஆலியா பட் இணைந்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது முதல் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்கிறேன்… புதுமுக நடிகையாகவே மீண்டும் உணர்கிறேன்… மிகுந்த பதட்டமாக இருக்கிறது” என தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ஆலியா பட்டின் அந்த பதிவு இதோ…