ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. தற்போது இந்தியில் ரீமேக்காகியுள்ளது. லக்ஷ்மி பாம் என தலைப்பிடப்பட்டிருந்த இந்த படம் கடந்த வாரம் லக்ஷ்மி என்று மாற்றப்பட்டது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார். இதில் அக்ஷய் குமார் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். 

கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. நவம்பர் 9-ம் தேதியான இன்று டிஸ்னி ப்ளஸ் சேனலில் வெளியாகும் இந்த படத்தை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். லக்‌ஷ்மி திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, UAE போன்ற நாடுகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் அக்ஷய் குமார் ரசிகர்கள். 

லக்ஷ்மி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. தமிழில் வெளியானதை போல் காமெடி கலந்த ஹாரர் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த புடவை கட்டும் காட்சி, முகத்தில் மஞ்சள் பூசுவது போன்ற காட்சிகள் காஞ்சனா படத்தை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது. படத்தின் புர்ஜ் கலிஃபா மற்றும் பம் போலே பாடல் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதிக ரசிகர்களை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது. 

இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. கர்னி சேனா என்ற அமைப்பு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது. அதில் லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல இதன் டைட்டில் இருப்பதாகவும் உடனடியாக டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதே போல, நடிகர் முகேஷ் கண்ணா உள்பட சிலரும் இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.டைட்டிலில் இருந்த பாமை நீக்கிவிட்டு லக்ஷ்மி என்று டைட்டிலை வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் அக்ஷய் குமார். அதில் அருகில் ராகவா லாரன்ஸ் அக்ஷய் குமாருக்கு மேக்கப்பில் உதவுகிறார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விமர்சன ரீதியாக இந்த படம் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.