தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம்குமார். கலகலப்பான முண்டாசுபட்டி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தனது அடுத்த திரைப்படமாக ராட்சசன் படத்தில் அதிர வைத்தார் ராம்குமார்.

சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் நான் சரவணன் கிறிஸ்டோஃபர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மேரி ஃபெர்னாண்டஸ் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். அந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் ராக்சசடு என ரீமேக் ஆனது.

இந்நிலையில் தற்போது ராட்சசன் திரைப்படம் பாலிவுட்டிலும் ரீமேக் ஆகிறது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அக்ஷய்குமாரின் பெல்பாட்டம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்.M.திவாரி இத்திரைப்படத்தையும் இயக்குகிறார்.

தயாரிப்பாளர் வாஷூ பாக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் படத்திற்கு மிஷன் சின்ரெல்லா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்குகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.