ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை. அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனால் அவ்வப்போது வலிமை அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், படக்குழுவினர் எதுவுமே தெரிவிக்காத விரக்தியில் தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்குப் பதிலாக வலிமை அப்டேட் என்று கேட்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து போனி கபூர் மட்டுமல்லாது படத்துக்குத் தொடர்பில்லாத எல்லாரிடமும் வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்தனர்.

இப்படி அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் நாயகன் அறிமுகப் பாடலை யுவன் முடித்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக செய்தி நேற்று வெளியானது.

பாடல் அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று யுவன் கூறியிருந்தார். ஒடிசாவில் திருவிழாக் காலங்களில் வாசிக்கும் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்கள் இந்தப் பாடலில் பங்கெடுத்துள்ளனர். இது ஒரு சரியான மாஸ் பாட்டு என்று யுவன் கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில், பிரபல நாளிதழின் சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என போனி கபூர் தெரிவித்துள்ளார்.