தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக, ரசிகர்கள் தல என கொண்டாடும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை படத்தை போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படத்தில் தல அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார் டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் டி.இமான் பெற்றார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடல் லிரிக்கல் வீடியோ யூ-ட்யூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. “கண்ணான கண்ணே” வீடியோ பாடலும் 145 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.