அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘துணிவு’ படத்திற்கு தணிக்கைக்குழு கொடுத்துள்ள சான்று(சென்சார் சர்டிபிகேட்) குறித்த அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்துடன், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு, விஜய் வேலுகுட்டி. சண்டைக்காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் கல்யாண் இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். துணிவு படத்திலிருந்து இதுவரை 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா' மற்றும் 'கேங்க்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம்போட வைத்தது. 

பொங்கல் விருந்தாக ஜனவரி 12-ல் வெளியாகும் இத்திரைப்படம், வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கிறது. மேலும் அஜித்தின் மாஸ் ஆக்ஷன் காட்சிகளைக் கோர்வையாகக் கலந்துகட்டி இப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ல் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் துள்ளலுடனும், எள்ளலுடனும் டிரெய்லர் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் ஏகத்தும் குஷியாகியுள்ளனர். மேலும் துணிவு படத்தைத் திரையில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்சமயம் வரை டிரெய்லர் 38 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ளது.

'மக்கள் பணத்த கொள்ளையடிக்கிறியே... உனக்கு வெக்கமா இல்ல' என்ற கேள்விக்கு வில்லத்தனமான குறும்புடன், 'இல்ல' என்று அவர் அடிக்கும் கமெண்ட் தொடங்கி, அவரது நடனம், வில்லத்தனம், சிரிப்பு என ரசிகர்கள் விரும்பும் அஜித் டிரெய்லர் முழுவதும் வியாபித்திருப்பது, ரசிகர்களிடம் படம் மீது இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.  

டிரெய்லரில் காணப்படும் துள்ளலான அஜித்தை படம் நெடுகிலும் காணமுடிந்தால் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்பது அஜித் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சுவாரியரின் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதனிடையே, துணிவு பத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்துள்ள சான்றிதழ் தரம் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

All set for #ThunivuPongal#Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @Gokulammovies @wcf2021 @Radhakrishnaen9 @IVYProductions9 pic.twitter.com/kdcaBW0wNl

— BayViewProjectsLLP (@BayViewProjOffl) January 2, 2023