தமிழ் திரை உலக ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் அஜித்குமார். முன்னதாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் பே வியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கிய வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கினார். காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடித்துள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு தன் பெயருக்கு முன்னால் வரும் அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை நீக்கிய அஜித்குமார் பின்னர் தனது ரசிகர் மன்றங்களையும் கலைத்தார். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்கள் தன்னை பாசமாக தல என அழைப்பதையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டார் அஜித்குமார்.

இதனிடையே கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அஜித்குமார் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித் தரப்பில் இருந்து திட்டவட்டமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“திரு.அஜித் குமார் அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எண்ணமே கிடையாது… மரியாதைக்குரிய ஊடக நண்பர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்”

அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.