தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனை அடுத்து கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கடைசியாக சினிமா வீரன் எனும் டாக்குமென்டரி திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் காதலர்களுக்கான ஆல்பம் பாடல் வீடியோ வெளியானது. ஹிந்தியில் முஸாஃபிர் என தயாரான இந்த ஆல்பம் பாடல் தமிழில் பயணி என்ற பெயரில் வெளியானது. மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து தற்போது பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுக்க முழுக்க காதல் படமாக ரொமான்டிக் திரைப்படத்தை இயக்கவுள்ளார். க்ளவுட் 9 பிக்சர்ஸ் சார்பில் மீனு அரோரா தயாரிக்கும் இப்படத்திற்கு ஓ சாதி சால் என பெயரிடப்பட்டுள்ளது. ஓ சாதி சால் திரைப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே இது ஓ சாதி சால் படத்தின் பாடல்களுக்கான பணியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.