கடந்த 2015-ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பிறகு STR நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கினார். மதுர மைக்கேல் என்ற பாத்திரத்தில் சிம்புவை மாஸாக காட்டியிருப்பார் ஆதிக்.

சிறந்த இயக்குனரான ஆதிக் சீரான நடிகரும் கூட. அருள்நிதி நடித்த கே-13 படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

தற்போது பிரபுதேவா வைத்து பஹீரா என்ற படத்தை இயக்கி வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது. 

மொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகியது. கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். படத்தில் நடிகை காயத்ரி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகிய காயத்ரி, சூப்பர் டீலக்ஸ், கே-13 என வரிசையான ஹிட் படங்களில் நடித்து அசத்தினார். 

அனேகன் படத்தில் நடித்த அமைரா தாஸ்தூரும் இந்த படத்தில் ஒரு சூப்பரான ரோலில் நடிக்கிறார். இன்று இயக்குனர் ஆதிக்கின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஆதிக். அருகில் பிரபுதேவா மற்றும் அமைரா தாஸ்தூர் உள்ளனர். மொட்டையடித்த கெட்டப்பில் இருக்கும் பிரபுதேவாவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

ஆதிக் கைவசம் காதலை தேடி நித்யாநந்தா எனும் படம் உள்ளது. நடிகர் பிரபு தேவா கடைசியாக விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். நிச்சயம் இந்த பஹீரா படத்தில் அசத்தலான டான்ஸ் காட்சிகள் இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். இயக்குனர் ஆதிக்கை அவரது பிறந்தநாளில் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது நம் கலாட்டா.