தமிழ் திரையுலகின் மக்கள் செல்வியாக திகழ்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிப்பதாக செய்தி வெளியானது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, சமூக பிரச்சினைகள் குறித்த கருத்துகளை, தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை யாரோ முடக்கி உள்ளனர்.

இதை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு முடக்கப்பட்டுள்ளன. அதை மீட்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை என் சமூக வலைதள கணக்குகளில் வரும் பதிவுகள், செய்திகள் பற்றி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

நிலைமை சீரானதும் நானே தெரிவிக்கிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். சினிமா நடிகர், நடிகைகளின் சமூக வலைதளக் கணக்குகளை ஹேக் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரலக்ஷ்மி கைவசம் சேஸிங் திரைப்படம் உள்ளது. இந்த சேஸிங் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை வீரகுமார் இயக்குகிறார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். தசி இசையமைக்கும் இந்த படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.