தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் கடைசியாக தெலுங்கில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்த வினய விதய ராமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அந்தகன். இத்திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் பார்வையற்ற நபராக நடித்துள்ளார். 

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகிவருகிறது அந்தகன் திரைப்படம். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் அந்தகன் திரைப்படத்தை இயக்குகிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

இந்நிலையில் தற்போது அந்தகன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஊர்வசி கலந்து கொண்டு தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். டப்பிங்கின் போது இயக்குனர் தியாகராஜனுடன் நடிகை ஊர்வசி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தொடர்ந்து அந்தகன் படத்தின் டீஸர் & டிரெய்லர் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.